196. அருள்மிகு திருத்தளிநாதர் கோயில்
இறைவன் திருத்தளிநாதர்
இறைவி சிவகாமியம்மை
தீர்த்தம் ஸ்ரீதளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்
தல விருட்சம் கொன்றை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருப்புத்தூர், தமிழ்நாடு
வழிகாட்டி காரைக்குடியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கியில் இருந்து 43 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தலச்சிறப்பு

Thiruputhur Gopuram Thiruputhur Valmigiஒருசமயம் கொன்றை மரங்கள் சூழ்ந்த பகுதியில் வால்மீகி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். நெடுங்காலம் தவம் செய்ததால் அவரைச் சுற்றி கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்து அருளினார். புற்றில் இருந்த முனிவருக்கு காட்சி தந்ததால் இத்தலம் 'திருப்புத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. மகாலட்சுமி இத்தலத்து இறைவனை வழிபட்டதால் மூலவருக்கு 'திருத்தளிநாதர்' என்னும் பெயர் ஏற்பட்டது. திரு - மகாலட்சுமி, தளி - கோயில்.

Thiruputhur Amman Thiruputhur Moolavarமூலவர் 'திருத்தளிநாதர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சிவகாமி' என்னும் திருநாமத்துடன் இரண்டு கரங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

முதல் பிரகாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், அகத்திய முனிவர் பூசித்த லிங்கம், வால்மீகி முனிவர் தவம் செய்த இடம் ஆகியவை உள்ளன. தவம் செய்த இடத்தில் வால்மீகி முனிவரின் திருவுருவம் உள்ளது.

இரண்டாவது பிரகாரத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வடக்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இந்திரன் மகனான ஜெயந்தனுக்கு பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.

இத்தலத்தில் நடராஜர், அம்பாளுக்கு நடனக் காட்சியைக் காட்டியருளினார். கௌரி தாண்டவம் என்னும் இந்த நடனம் ஏழு வகை நடனங்களுள் ஒன்று. நடராஜப் பெருமானும், சிவகாம சுந்தரியும் கற்சிலை வடிவில் இங்கு காட்சியளிக்கின்றனர்.

Thiruputhur Yoga Bairavarஅந்தகாசுரன், சம்பாசுரன் என்னும் இரண்டு அசுரர்களை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பைரவர், இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து யோக பைரவராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் யோக பைவரர் மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தியபடி, கால் கட்டை விரலை தரையில் ஊன்றியபடி தவம் செய்யும் நிலையில் காட்சி அளிக்கின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு இங்கு 'நாய்' வாகனம் கிடையாது. அஷ்டமி தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதனால் தற்போது இக்கோயில் 'பைரவர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் மகாவிஷ்ணு, யோக நாராயணராக வீற்றிருக்கின்றார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com